Friday, October 29, 2010

பினாத்தல்-1

வணக்கம்...

எனது குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவம், எனது பெற்றோர்கள், எனது ஆசிரியர்கள் என பலதரப்பிலும் நான் கற்றுக் கொண்டு சிந்தித்ததை விட இணையம் என்னை அதிகமாகச் சிந்திக்கத் தூண்டியது. சிந்தித்ததின் விளைவு, எனக்குள் நானே பினாத்த தொடங்கி விட்டேன். அந்த பினாத்தல்களின் கோர்வை தான் இவை...

இணையம் எனக்கு, பல நண்பர்களையும், மகிழ்ச்சியையுமே பெரும்பாலும் தந்திருந்த போதும் சில கசப்புகளையும் தந்தே இருக்கிறது. இணையத்தில் நடக்கும் விவாதங்களும், ஒவ்வொருவரும் தான் பின்பற்றும் கொள்கையினை நிரூபிக்க அவர்கள் தரும் வரலாற்று ஆதாரங்களும் என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

கம்ப்யூனிசம், சோஷலிஸம், நாத்திகம், ஆத்திகம், காந்தீயம், ஏகாதிபத்தியம், பெண்ணியம், ஆணாதிக்கம் அப்பப்பா எத்தனை விதமான கொள்கைகள்... முதலில் படிக்க சுவாரஸியமாக இருந்தாலும், நாளாக நாளாக இந்த இஸங்களின் வாதங்களைப் பார்த்து பார்த்து எனக்கு இஸம் என்று சொன்னாலே விஷம் எனச் சொல்வது போலக் கேட்கலானது.

அப்பொழுது தான் எனக்கு புரிந்தது ஒரு விஷயம். விவாதம் செய்வோர் அனைவரும் தாங்கள் பின்பற்றும் கொள்கையே சிறந்தது எனச் சொன்னாலும் அவர்களின் கொள்கைகளில் சிற்சில குறைபாடுகள் உள்ளது என்பதை அனைவரும் புரிந்தே வைத்திருந்தனர். இருந்தும் தனது பெரும்பான்மையான கருத்துகள் அக்கொள்கையோடு ஒத்துப் போவதால் தான் பின்பற்றும் கொள்கையினை விட்டுத் தரவில்லை என்பதும் புரிந்தது.

ஒவ்வொரு கொள்கைக்கும் ஆரம்பம் என்று பார்த்தால் எவனொ ஒரு தலைவன் அதற்கு ஆதாரமாய் இருந்திருக்கிறான். கொள்கையை உருவாக்கிய தலைவர்களின் வரலாற்றைப் பார்த்தோமானால் பெரும்பாலும் ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல வாழ்ந்திருக்கிறார்கள். எப்பொழுது ஒரு கொள்கையைத் தன்னால் பின்பற்ற இயலவில்லையோ அப்பொழுது அந்த கொள்கையை மற்றவர்க்குச் சொல்ல அந்த தலைவன் அருகதை அற்றவனாகிறான். நாம் இதனைச் சொல்ல அருகதை அற்றவன் என்று எண்ணாமல் தமக்கு தோன்றியதை எல்லாம் தானே உலகுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி என பிதற்றிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கொள்கையையும் உருவாக்கியவனின், இந்த அருகதை அற்ற தன்மையே இன்று அக்கொள்கையின் பலவீன்ங்களாகக் காட்சியளிக்கிறது...

வரலாற்றை உருவாக்க வேண்டிய இன்றையத் தலைமுறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனப் பார்த்தால், தான் கொண்ட கொள்கையின் வரலாற்றையும், தனது கொள்கைக்கு மாற்று கருத்தாக உள்ளதெல்லாம் போலியான்வை என நிரூபிப்பதிலும் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் படிப்பதைத் தவறென்று நான் சொல்லவில்லை. வரலாற்றைப் படித்தோமா, தான் படித்த கொள்கைகளில் இருக்கக் கூடிய நன்மைகள் எனக் கருதுபவற்றை எல்லாம் ஒன்றாக்கி தனக்கென்று ஒரு புது கொள்கையை உருவாக்கி புது ஒரு வரலாற்றை உருவாக்கினோமா என்றல்லாமல் தான் பின்பற்றும் கொள்கையே சிறந்தது என வாதிட்டு வாதிட்டு பழைய வரலாற்றிலேயே தனது காலத்தைக் கழிக்கிறார்களே அன்றி புது வரலாற்றை ஒருவரும் இன்ரைய சூழலில் உருவாக்க முன்வரவில்லை என்பதே நிஜம்.

இதனைக் கண்டே நான் இன்று தொடங்கி இருக்கிறேன் எனது கொள்கைகளை பினாத்தல்களாக... இங்கு நான் பினாத்தப் போவது எல்லாம் எனது தனிப்பட்ட கொள்கைகள். நான் ஆன்மீகத்தை, சாதீயத்தை, பெண்ணியத்தை, சக மனிதனை எப்படிப் பார்த்தேன், இப்பொழுது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றியது தான் இந்த பினாத்தல். இதன் ஆரம்பமும் முடிவும் நானே. நான் கொண்ட கொள்கையின் மீது யாரேனும் சந்தேகம் எழுப்பினால் நான் பதிலிடப் போவதில்லை. நான் உயிருடன் இருக்கிறேன் என்பது எத்தனை நிஜமோ அத்தனை நிஜமானது எனது கொள்கைகளும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தங்களுக்கு எனது கருத்தில் மாற்றுக் கருத்து இருந்தால், நிச்சயமாக இருக்கும், அவையனைத்தும் உங்கள் கொள்கைகளாகக் கொண்டு நீங்கள் ஒரு புது வரலாற்றை உருவாக்குங்கள்...

பினாத்தல் தொடரும்...

2 comments:

  1. //நாளாக நாளாக இந்த இஸங்களின் வாதங்களைப் பார்த்து பார்த்து எனக்கு இஸம் என்று சொன்னாலே விஷம் எனச் சொல்வது போலக் கேட்கலானது.//

    அண்ணா உங்க நகைச்சுவை பேச்சே தனிதான்... :)

    //நான் உயிருடன் இருக்கிறேன் என்பது எத்தனை நிஜமோ அத்தனை நிஜமானது எனது கொள்கைகளும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை//

    இது சூப்பர் அண்ணா...


    தொடருங்க உங்க பினாத்தல்களை.... காத்திருகிறேன் வாசிக்க....

    ReplyDelete
  2. நல்லாத்தான் பினாத்துறீங்க அண்ணா

    ReplyDelete