Friday, December 31, 2010

பினாத்தல் - 8

எனது தாத்தாவின் காலத்தில் எங்கள் வீட்டில் (எங்கள் வீட்டில் மட்டுமல்ல எங்கள் ஊர் முழுவதும்) கடைபிடிக்கப்பட்ட நிலைப்பாட்டை நான் முன்னமே சொல்லி இருந்தேன். எனது தந்தைக்கு பிற இனத்தவன் வீட்டிற்குள் வந்தால் என்ன என்று எண்ணம் இருந்த போதிலும் அவர் தன்து தந்தையிடம்(அதாவது எனது தாத்தாவிடம்) பேசி வீட்டில் மனஸ்தாபம் உருவாவதை விரும்பாமல் எனது தாத்தா காலமான பிறகு எனது தந்தையின் காலத்தில் அதாவது எனது தந்தை வீட்டின் அதிகாரத்திற்கு வந்த பிறகு எங்கள் வீட்டில் சாதி வேறுபாடு பார்க்காமல் எவரேனும் விருந்தினராக வந்து தங்க தடை இல்லாமல் வாழும் சூழல் உருவாகி இருக்கிறது.

சாதி வேறுபாடு என்பது எதுவும் இல்லை என்று என் தந்தை மூலம் உணர்ந்த நான் என்னுள்ளிருந்த சாதி வேறுபாட்டைக் கலைந்து இன்று கலப்புத் திருமணம் செய்துக் கொள்வதிலும் தவறில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்து உள்ளேன். ஆனால் கலப்புத் திருமணம் பற்றி எனது தந்தையிடம் நான் பேசி வீட்டில் மனஸ்தாபம் வர விரும்பாத நான் இதனை, வீட்டின் அதிகாரம் என் கைக்கு வரும் பொழுதே அதாவது எனது மகனுக்கு கலப்புத் திருமணத்தைச் செயல்படுத்துவதையே வீட்டின் சூழலுக்கு உகந்ததாகக் கருதுகிறேன். இது காலம் தாழ்த்தி ஊரை ஏய்க்க நான் செய்யும் சதி எனச் சிலர் சொல்லலாம். அவர்களுக்கு நான் அப்படியே இருந்து விட்டு போவதில் எனக்கு வருத்தம் இல்லை.

குடும்பத்தில் பல காலமாக வேரூரி வளர்ந்த ஆலமரம் போன்ற சாதியை வெட்டப் போய் குடும்பம் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்கான முன்னேற்பாடுதான் இது. இதனால் நான் சொல்ல வருவது சாதியை ஒழிக்கிறேன் என்று மேடையேறி பிரசங்கம் செய்பவர்கள் முதலில் தாங்களும், தங்கள் குடும்பத்தையும் சாதியை முழுவதும் எதிர்க்கக் கூடியதாய் மாற்றுங்கள். சமூகம் தானாய் சாதி இல்லாததாக மாறி விடும். இதற்கான சூழலும் இப்பொழுது கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருப்பதால் ஏதுவாகவே இருக்கிறது. என்னுடன் பேசும் எல்லோருக்கும் இந்த ஒரு விஷயத்தில் வெறுப்பு வரக் கூடும். அது நான் எப்பொழுதும் மாற்றம் என்பது தன்னிடத்தில் இருந்தும் தன்னுடைய குடும்பத்தில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என நான் சொல்வது. இது முட்டாள்தனமாகவும் படலாம். ஆனால் இதுவே நிதானமான மற்றும் நிரந்தரமான மாற்றத்தைச் சமூகத்தில் கொண்டு வர வழிவகைச் செய்யும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

சமூகத்தில் சாதி ஒழிப்பு வீட்டில் இருந்து மாறினால் மட்டும் மாறுமா என்றால் மாறாது. இன்னும் ஒரு விஷய்மும் மாற வேண்டும். அது சாதியை எனக்கு பள்ளிப் பருவத்தில் அறிமுகம் செய்து வைத்த அரசாங்கம் முத்திரை குத்தும் சாதிச் சான்றிதழும், இட ஒதுக்கீடு முறையும். இவையிரண்டும் இல்லாத்தாக வேண்டும் என நான் எதற்காகச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா. ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்கிறேன். அரசாங்க வேலைக்காகவும் இன்னும் சில சலுகைகளுக்காகவும் இன்று தனது சாதியை தாழ்த்தப்பட்ட சாதி என மாற்றிச் சாதிச் சான்றிதழ் வாங்கும் வேடிக்கைகளை நான் கண்கூடாகக் காண்கிறேன். இந்நிலை மேலும் தொடராமலும், சாதியின் அடிப்படையில் இடம் என்றில்லாமல் தகுதி உடையவனுக்கே இடம் என்று வந்தால் சமூகத்தில் இருந்து சாதி அழிவதோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தான் போட்டியிடும் இடத்திற்காய் தனது தரத்தை உயர்த்திக் கொள்ள முனைவார்கள். இதை சாதியை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் ஆதரிப்பார்களா... நிச்சயம் மாட்டார்கள்... ஏனெனின்ல் இன்று சாதிக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அதை வைத்து ஆதாயம் தேடவே அதிகம் முற்படுகிறார்கள் ஒருசிலரைத் தவிர...

சாதியைப் பற்றிய எனது நிலைப்பாடு இத்துடன் நிறைவடைகிறது. அடுத்து...

பினாத்தல் தொடரும்...

பினாத்தல் - 7

சாதியக் கொடுமைகள் பற்றி பார்க்கும் முன்னர் படிப்பவர்களின் தெளிவிற்காக, எனது இந்நிலைப்பாடை படிக்கும் பொழுது இவன் என்ன இனத்தவனாய் இருக்கக் கூடும் என்று ஆராய வேண்டாம். கண்டிப்பாய் நான் பார்ப்பணன் அல்லன். இன்ன சாதியினன் என்று குறிப்பிட்டுக் கொள்ள விரும்பாத மனித இனத்தைச் சார்ந்தவன் என்று படிக்க விரும்பினால் மட்டும் மேலும் எனது நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள என்னைத் தொடருங்கள்.

சாதியை எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன் என்று குரல் கொடுக்கும் சிலர் ஆரம்பத்திலேயே பார்ப்பனியன் அதைச் செய்தான், இதைச் செய்தான் எனக் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் பார்ப்பனியர்கள் மொத்தம் எத்தனை சதவீதம். (மூன்றோ, மூன்றே முக்காலோ என்று கேள்வி). எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அளவிலான பார்ப்பனர்கள் தான் சாதிக் கொடுமைக்கு மொத்த ரணமா. என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனர்களின் பங்கும் சாதிக் கொடுமையில் உள்ளது என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பார்ப்பனியர்கள் மட்டுமே சாதிக் கொடுமைகளுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்...

எனது தாத்தா காலத்தில் எங்கள் வீடுகளில் பிரவேசிக்க பிற இனத்தவருக்கு மட்டுமல்ல, பிராமணர்களுக்கும் கூட அனுமதி இருந்ததில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், சில விசேஷ நிகழ்வுகளான, புதுமனைப் புகுவிழா, திருமணம் மற்றும் இறந்தவர்களுக்கான ஈமக்கிரியைச் செய்ய, மந்திரம் ஓத பிராமணர்கள் வீட்டில் நுழைய அனுமதி இருந்தது. மற்றபடி சொந்த ரத்த பந்தங்களைத் தவிர வேறு எவருக்கும் வீட்டில் அனைத்து பகுதிகளிலும் நுழைய அனுமதி இருந்ததில்லை. எங்கள் இனத்தவரே வருகை புரிந்தாலும் வரவேற்பறை வரையே அனுமதி இருந்தது.

இப்பொழுதும் சொல்லுங்கள் பிராமணர்கள் மட்டுமே சாதிக் கொடுமைக்கு காரணமா. சாதிக் கொடுமைக்கு பார்ப்பனியம் மட்டும் காரணம் என்று இன்னும் சொல்வார்களானால் அதற்கு நான் காரணமாக நினைப்பது கடவுள் இல்லை என்ற கொள்கைக்கு வலு சேர்க்க இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்கிறார்களோ என்பது தான். சரியாகச் சொல்ல வேண்டுமானால் எனக்கு இவர்களால் ஒரு மாபெரும் குழப்பம் தான் மிஞ்சுகிறது. பார்ப்பனியம் பிடிக்காமல் போனதால் கடவுள் இல்லை என்று சொல்லத் தொடங்கினார்களா, அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கைக்கு வலு சேர்க்க பார்ப்பனியம் பிடிக்காமல் போனதா... இது எனக்குச் சம்பந்தமில்லாதது என்று தானே சொல்கிறீர்கள்... சரி வாருங்கள் சாதியைப் பற்றிய எனது நிலைப்பாடிற்கேச் செல்வோம்.

சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு முறையின் இன்றைய நிலை என்ன. இட ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் வேண்டுமானால் அது ஒரு நல்ல திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றும் பள்ளி, கல்லூரி, அரசாங்க வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் தானா... தகுதி உடையவர்க்கு இடத்தை அளிக்கலாமே... தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று சொல்லி இன்றும் அவர்களை மட்டம் தட்டுவதாகவே இந்த இட ஒதுக்கீடு முறை எனக்குப் படுகிறது.

சாதிய வேறுபாடுகள் என்னுள் பள்ளிப்பருவத்தில் ஏற்பட்டது என்று சொன்னேன் அல்லவா, அது எவ்வாறு என்னை விட்டு அகன்றது என நான் சொல்லும் காரனங்களே சாதியை சமூகத்திலிருந்து ஒழிக்கவும் உதவும் என நான் நம்புகிறேன். இனி, சாதியை என்னிலிருந்து அகற்றிய, சமூகத்திலிருந்து அகற்ற உதவும் என நான் நம்பும் வழிமுறைகள்...

பினாத்தல் தொடரும்

பினாத்தல் - 6

சாதியைப் பற்றிய எனது நிலைப்பாடு

இந்நிலைப்பாடு சாதியின் கொடுமைகளை உணராமல், சாதிக் கொடுமை என்பதை புத்தகங்கள் வாயிலாக மட்டுமே அறிந்து, பாடப்புத்தகத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை என்பது மனிதத்தன்மையற்ற செயல் என அர்த்தம் விளங்காமலேயே படித்து வளர்ந்தவனின் நிலைப்பாடு. இப்படி வாழ்ந்தவனுக்கு பெரிதாக என்ன ஒரு நிலைப்பாடு இருக்க முடியும் சாதியைப் பற்றி என நினைக்கிறீர்களா, இங்கேயே நிறுத்தி விடுங்கள், மேற்கொண்டு படிக்காமல்.

பள்ளிப்பருவம், சாதி எனக்கு அறிமுகமான பருவம். பள்ளியில் சேர்வதற்கு சாதிச் சான்றிதழ் தேவைப்பட்ட பொழுது தான் எனக்கும் சாதிக்கும் பரிச்சயம் தொடங்கியது. பள்ளியில் சேர்வதற்காக தேவைப்பட்ட எனது ஜாதி, பின்நாட்களில் வெளியுலகத்துக்கு, என்னை நான் எனது தந்தை பெயர் கொண்டு இன்னார் மகன் என அறிமுகப்படுத்திக் கொண்ட போது என்னை அடையாளம் கண்டு கொள்ளாத சிலருக்கு நானாக எனது சாதியைக் குறிப்பிடாமல் இருந்த போதும், அக்குழுவில் என்னை அடையாளம் கண்டு கொண்ட சிலர், என்னை அடையாளம் கண்டு கொள்ள இயலாதவர்களிடம் எனது தந்தையின் பெயரைச் சாதியின் பெயரோடு சொல்லி அறிமுகம் செய்து வைத்த போது என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். இவ்வாறு தான் என்னால் சாதி என்பது பிள்ளைப்பருவத்தில் உணரப்பட்டது.

ஒருவனுக்கு கர்வம் என்பது எப்பொழுது வருகிறது. ஒருவனுக்கு தான் பெரியவன் என்ற எண்ணம் எப்பொழுது வருகிறது. தன்னை மற்றவர் புகழும் போதும், உயர்த்திப் பேசும் போதும்தானே... அப்படித்தான் என்னுள் சில காலம் சாதி வேறுபாடு பார்க்கும் குணம் தலையெடுத்திருந்தது. அதற்கு காரணம் என்னைச் சாதி வேறுபாடு பார்க்க வைத்த எங்கள் வயலில் வேலை செய்பவர்கள் நான் மிகச் சிறியவனாய் இருந்த போதும் எனக்கு அளித்த மரியாதை, எனக்கு அறிமுகம் இல்லாத வெளியுலகத்திலும் நான் இன்ன சாதியினன் என்பதால் கிடைத்த மரியாதை போன்ற நிகழ்வுகள்.

இக்குணம் என்னுள் இருந்த வயது பதினொன்று. நாளாக நாளாக பதினைந்து வயதுக்குள் என்னுள் இருந்த இக்குணம் முற்றிலும் மாறி விட்டது. எப்படி? இதைப் பார்க்கும் முன்னர் சில கேள்விகள் எழுகிறது என்னுள். அவை,

சாதீயக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் எனச் சொல்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனீயத்திற்கு எதிரான குரலை மட்டும் கொடுப்பது ஏன்?

சாதியை ஒழிக்க வேண்டும் என விரும்புபவர்களில் பலர் சாதியின் அடிப்படையில் அளிக்கப்படும் முன்னுரிமைகளை வரவேற்பது ஏன்?

பினாத்தல் தொடரும்...

Tuesday, November 9, 2010

பினாத்தல் - 5

பினாத்தல் 4 ன் தொடர்ச்சி,

கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குதல் என்பது என்னை ஒருமுகப்படுத்த என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா, அதே போல் நீ வணங்கும் போது வேண்டிக் கொள்ளும் நிகழ்வுகள் உன்னுள் எவ்வித உளவியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்கிறேன் கேள்.

ஒருமுகப்படுத்தப்பட்ட என்னுள் நீ வேண்டிக் கொள்ளும் எந்த விஷயமானாலும் உன்னுள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, நீ பெரும்பாலும் " எனக்கு நல்ல படிப்பு வேண்டும், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும், என்னை நம்பி வருபவர்களை நான் கைவிடக் கூடாது" என்று வேண்டிக் கொள்கிறாய் அல்லவா, இது என்னுள் ஆழமாய் பதிந்து விடுகிறது.

என்னுள் ஆழமாய் பதியப்பட்ட இவ்வேண்டுதல்கள் உன் மனம் அமைதியாய் இருக்கும் போதெல்லாம் இவற்றைச் சொல்லி உன்னை, நீ வேண்டியபடி இருக்கத் தூண்டுகிறது. என்னுள் ஆழமாய் பதியப்படும் உனது வேண்டுதல்களை நோக்கி உன்னை நான் நகர்த்துகிறேன். இவ்வாறு உன்னை, உனது வேண்டுதலின்பால் நகர்த்துவதால் நான், நீ வேண்டிய பொருள் உன்னைச் சேர வழிவகை செய்கிறேன்.

என்னை நீ எப்படித் தயார் செய்து வைக்கிறாயோ அப்படியே நீ ஆகிறாய். என்னுள் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உன்னில் பிரதிபலிக்கும். அதனால் என்னுள் விதைக்கப்படும் வேண்டுதல்களும், ஒருமுகப்படுத்தப்பட்ட வழிபாடும் உன்னை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்வது உன் கையில்தான் உள்ளது.

எனது மனதுடனான இந்த பினாத்தல்களை கேட்டு ஆன்மீகம் பற்றிய எனது நிலைப்பாட்டில் சற்று தெளிவடைந்தவனாக அடுத்து என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் சாதியத்தைப் பற்றிய எனது நிலைப்பாடை ஆராயத் தொடங்கினேன்.

பினாத்தல் தொடரும்...


Tuesday, November 2, 2010

பினாத்தல் - 4

பினாத்தல்- 3 இன் தொடர்ச்சி,

என் மனதிடம் அடுத்ததாய், "நான் வணங்கும் கடவுளைப் பற்றிச் சொன்னாய், நல்லது. எல்லாக் கடவுளும் ஒன்றாயிருக்க நான் ஏன் கடவுளைக் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும்" எனக் கேட்டேன்.

என் மனம் என்னைப் பார்த்து பேசத் தொடங்கியது. நீ எப்பொழுதும் கடவுளைக் கோயிலுக்குச் சென்றுதான் வணங்குகிறாய் எனச் சொன்னது முற்றிலும் தவறு. நீ, வீட்டிலுள்ள கடவுளையும், வீதிக்கு ஊர்வலமாய் வரும் கடவுளையும் ஏன் உனக்கு துன்பம் வரும் பொழுது எல்லாம் நீ நிற்கும் இடம் இன்னதென்று பாராமல் ஒரு நிமிடமேனும் கடவுளை வேண்டியிருக்கிறாய் என்பதே உண்மை.

இருந்தும், நீ கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்டிருக்கிறாய். சொல்கிறேன், கேள்! கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்வது என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட மனதில் நிகழ வேண்டிய ஒன்று. எல்லோராலும் தன் மனதை வீட்டிற்குள் ஒரு முகப்படுத்த இயலாது. அதற்கு காரணமாக அமைவது அவர்களைச் சுற்றியுள்ள சுற்றமும், அவர்களுக்கான குடும்பத்தின் கடமைகளும். அதனால் கோவிலுக்குச் செல்லும் பொழுது ஒவ்வொருவராலும் தன் மனதின் புறத்தே உள்ள சலனங்களில் இருந்து வெளிவர இயலுகிறது.

புறச்சலனங்கள் நீங்கிவிட்டால் போதுமா, கடவுளை ஒருமுகத்தோடு வணங்கி விட இயலுமா என்றால் அதுவும் அனைவராலும் இயலாது. என்னை(மனதை) அனைவராலும் சீக்கிரம் ஒருமுகப்படுத்துதல் என்பது இயலாத காரியமாக இருப்பதாலேயே உருவ வழிபாடு செய்து என்னை ஒருமுகமாக்க முயல்கிறார்கள். உருவ வழிபாடு எப்படி என்னை ஒருமுகமாக்குகிறது என்றும் சொல்கிறேன், கேள்!

கோவிலின் கருவறையில் இப்பொழுது இருப்பது போல் மின்விளக்குகள் பன்டைய காலங்களில் இல்லை. இப்பொழுதும் பல கோவில்களின் கருவறைக்குள் மின்விளக்கிற்கு அனுமதி இல்லை. அது ஏனென்று யோசித்தாயா. மின்விளக்கின் வெளிச்சத்தில் கடவுளைக் காணும் போது உன் பார்வை பல இடங்களையும் சுற்றி வரும். அதனால் என்னைக் கட்டுபடுத்தி ஒருமுகமாக்குவது என்பது இயலாது. அதனாலேயே பன்டைய காலங்களில் ஒரு சிறு விளக்கின் ஒளியில் கடவுளைக் கண்டு மக்கள் பிரார்த்தித்தனர். விளக்கின் ஒளியானது உனது பார்வையை தன் பக்கமாகவே ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் என்னையும் வேறு எண்ண ஓட்டத்திற்கு தள்ளாமல் தடுக்கிறது.

இதன் காரணமாக கொவிலுக்குச் செல்லும் போது, என்னை ஒருமுகப்படுத்தி வேண்டுதல் என்பது சாத்தியமாகிறது. என்னை எங்கேயும் உன்னால் ஒருமுகப்படுத்தி கடவுளைப் பிரார்த்திக்க முடியுமென்றால் கோவில் வேண்டாம், இடர்வரும் இடம் எதுவாயினும் அங்கிருந்தபடியே கடவுளைப் பிரார்த்திக்க இயலும். கோவிலுக்குச் சென்று வழிபடுவதின் காரணம் இதுதான்.

இன்னுமொன்றும் சொல்கிறேன் கேள். அது...

பினாத்தல் தொடரும்...