Sunday, October 31, 2010

பினாத்தல் -2

பினாத்தல்கள் ஏராளமாக இருந்த போதும் முதலில் எதைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கும் போது என் கண் முன்னே நிற்பது எனது கடவுள் நம்பிக்கை பற்றியது. சற்று பெரியதாக இரண்டு அல்லது மூன்று பினாத்தல்களாகக் கூடச் செல்லலாம் இந்த எனது கொள்கையை. இனி பார்ப்போம் எனது கடவுள் நம்பிக்கையை....

நானும் எனது கடவுள் நம்பிக்கையும்:

எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என எப்போது என் மனதைக் கேட்டாலும் சற்றும் தயக்கமில்லாமல் வந்து விழும் பதில்கள், உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நீ ஒரு ஆத்திகன். நீ ஆத்திகத்தை நம்புகிறவன் ஆனால் ஆன்மீகவாதிகளை நம்புகிறவன் அல்ல. உன்னுள் எப்படி இந்த ஆத்திகம் குடிவந்தது என்று தெரிந்து கொள்ள உனது சிறு வயது காலம் முதல் இன்று வரை சற்று உன் எண்ண ஓட்டத்தைத் திரும்பி பார் என்பதாகவே இருக்கும்.

எனது சிறு வயதைத் திரும்பி பார்க்க திரைப்படங்களில் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சுழற்சக்கரம் இல்லாமலேயே, மனதால் எனது மூன்றாம் அல்லது நான்காம் வயதுக்கு விரைகிறேன். அங்கு, நான் எங்கள் வீட்டின் பூஜையறையில் எனது தாயோடும், சகோதரர்களோடும், பூஜை செய்ய எல்லாம் தயாரா என்று பார்த்து பூஜையை ஆரம்பிக்கத் தயாராக நிற்கும் எனது தந்தையோடும் நின்று கொண்டிருக்கிறேன்.

அப்பா, பூஜை செய்து முடித்ததும் அனைவரும் சாமியை கும்பிட்டுக் கொண்டிருக்க, நான் எனது தாயின் முந்தானையைப் பிடித்து இழுத்தவாறு, அம்மா... அம்மா... சாமியிடம் என்ன வேண்டிக் கொள்வது என நச்சரிக்கத் தொடங்கினேன். தான் சாமியைக் கும்பிடுவதை நிறுத்தி என்னைப் பார்த்து எனது தாய் எதேச்சையாக, "அதோ சாமி பூஜைக்கு வைத்திருக்கிறோம் இல்லையா வாழைப்பழம், அதை வேண்டுமென்று வேண்டிக் கொள் என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு மறுபடியும் சாமி கும்பிடுவதில் ஆழ்ந்தாள்.

சாமி கும்பிட்டுவிட்டு, அப்பா எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்ததும் அன்றைய பூஜை முடிந்தது. அம்மா படையல் சாப்பாடில் ஒரு பாகம் எடுத்துக் கொண்டு சென்று காக்கைக்கு வைத்து விட்டு, பூஜையறையை ஒழுங்கு படுத்தினாள். பிறகு அனைவரும் சாப்பிட உட்கார்ந்தோம். அம்மா திடீரென்று சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து," சாமியிடம் என்ன வேண்டிக்கிட்ட" என்றாள். நான், " வாழைப்பழம் வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகச் சொன்னேன்". திடீரென்று என்ன நினைத்தாளோ எனது தாய், சாப்பிட அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து பூஜையறைக்குச் சென்று வாழைப்பழத்தை எடுத்து வந்து என் கையில் கொடுத்து, "சாமி, நீ கேட்ட பழத்தைக் கொடுத்து விட்டது" எனச் சொன்னாள்.

அவ்வாறு சொன்னதோடு நில்லாமல், நீ இறைவன் மீது எப்பொழுதெல்லாம், நம்பிக்கை வைத்து ஒருமுகமாக நின்று நீ வேண்டுகிறாயோ அப்பொழுதெல்லாம் நீ கேட்டது இப்பொழுது போலவே என்றும் கிடைக்கும் என்றாள். அன்று எனக்கு புரிந்தது, "கடவுள் என்பது நாம் கடவுளின் மேல் வைக்கும் நம்பிக்கையே, நம்பிக்கையே கடவுள்" என்று. அன்றிலிருந்து நான் எனது நம்பிக்கையால், கடவுள் மீது வைத்த நம்பிக்கையால் பல வெற்றி பெற்றிருக்கிறேன். அதையெல்லாம் பார்க்கும் முன் இன்னுமொரு பூஜையின் போது நடந்த சிறு நிகழ்வைச் சொல்லிக் கொள்கிறேன்.

எனது வீட்டில் எப்போதும் நடப்பது போல அன்றும் ஒரு பூஜை நடந்து முடிந்தது. மறுபடியும் நான் வாழைப்பழம் வேண்டிக் கொண்டேன் என என் தாயிடம், வாழைப்பழம் கேட்க, எனது அண்ணன்களும், அப்பாவும் கூடச் சேர்ந்து கொண்டு என் அம்மாவிடம் வாழைப்பழம் கேட்கலாயினர். பூஜைக்கு, எங்கள் வீட்டில் இரண்டு வாழைப்பழங்கள் வைப்பதே அன்று வரை பூஜை முறையாக இருந்து வந்தது. அதனால் இரண்டு பழத்தை எனது தாய் நான்கு துண்டாக்கி எனது இரு அண்ணன்களுக்கு ஆளுக்கொரு பங்கையும், எனக்கு ஒரு பங்கையும், எனது அப்பாவுக்கு ஒரு பங்கையும் பகிர்ந்தளித்தாள்... அதற்கு அடுத்து நடந்த பூஜையிலிருந்து எங்கள் வீட்டுப் பூஜையில் சிறு மாற்றம் இருந்தது, அது....

"பூஜையில் இரு வாழைப்பழங்களுக்குப் பதிலாக நான்காக வைத்து பூஜை செய்யப்பட்டது".... :)))

பினாத்தல் தொடரும்...

No comments:

Post a Comment