Sunday, October 31, 2010

பினாத்தல் - 3

பினாத்தல் - 2 ன் தொடர்ச்சி...

என்னுள் எப்படி ஆத்திகம் நுழைந்தது என்று என் மனம் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, நிறுத்து.... நிறுத்து, என நான் இடைமறித்து இன்னொன்றைக் கேட்கலானேன். அது, "நீ, என்னைக் கடவுள் நம்பிக்கை உள்ள ஆத்திகன் என்கிறாய், அப்படியானால் நான் எந்த கடவுளை நம்பி வணங்குகிறேன் சொல்" எனக் கேட்டேன். மனம் சிரித்துக் கொண்டே "நான் உனக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன், அந்தக் கதையின் முடிவில் ஒரு கேள்வி கேட்பேன்", அந்தக் கேள்விக்கான பதிலே நீ எந்தக் கடவுளை நம்புகிறாய் என்பதற்கான பதில் என்றது.

கதை என்றதும் எப்பொழுதும் போல கேட்கத் தயாராய் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டேன். மனம் சொல்லத் தொடங்கியது. ஒரு நாள் உலகின் ஓவியர்களுக்கு எல்லாம் யாரோ ஒருவரின் ஒரு அறிவிப்பு வந்தது. அது, நான் நாளை ஒரு நாள் முழுதும் உங்களுக்கு என் நிழலைக் காட்சியாகத் தருவேன். என் நிழலை மட்டுமே பார்த்து அந்நிழலை வரைந்து அதனைக் கொண்டு என்னை யார் கண்டறிகிறீர்களோ, அவர்களுக்கு நான் மிகச்சிறந்த பரிசை அளிக்கப் போகிறேன் என்பதாகும். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அது "என் நிழலை ஒவ்வொரு ஓவியனும் தனித்தனியாக ஒரே முறை மட்டும் பார்க்கலாம்" என்பதாகும்,

போட்டிக்கான நாள் வந்தது. தன்னை மிகச்சிறந்த ஓவியர் என்று நினைத்துக் கொண்ட ஓவியர் ஒவ்வொருவரும் நிழலைத் தனித்தனியாகக் காணச் சென்றனர். நிழலைக் கண்டு வந்தவர்கள் ஒவ்வொருவரும் உயரமான உருவமாய், குள்ளமான உருவமாய், பருமனாய், ஒல்லியாய் என பலவிதமாய் தான் கண்ட நிழலை வரைந்தனர். காரணம் அந்நிழலைத் தருபவரின் மேல் விழும் சூரியனின் கதிருக்கேற்ப நிழல் மாறியதே. இது மட்டுமல்ல ஒரு ஓவியர் தான் காணச் சென்ற போது அவருக்கு நிழலே கிடைக்கவில்லை. காரணம் சூரியனின் கதிர்கள் நிழலைத் தரும் உருவத்திற்கு செங்குத்தாய் அமைந்து விட்டதால். இவ்வாறு அனைவரின் ஓவியத்தையும் பார்த்து வெறுத்துப் போன ஒருவன் நிழலே இல்லை என்று ஒருவன் பார்த்துவிட்டுச் சொல்கிறான் என்றால் அதனைக் காணவும் வேண்டுமா என்று தன் கண்களை மூடியவாறு நிழலைக் காணச் சென்று நிழல் விழும் இடத்தைக் கடந்து வெளியே வந்து நிழல் தருபவனே இல்லை என்றும் கூறலானான்.

இப்பொழுது நீ சொல், ஓவியர் ஒவ்வொருவரின் உருவத்தின் நிழலும் வேறுபட்டதாக உள்ளதாலோ, அல்லது நிழலில்லா உருவம் என்று ஒருவன் சொன்னதாலோ அல்லது கண்ணை மூடிக் கொண்டு ஒருவன் உருவமே இல்லை என்று சொன்னதாலோ உருவம் இல்லாததாகி விடுமா, பதில் சொல் என்றது. நானும் சற்று யோசித்து, "உருவம் ஒன்றே, பார்க்கும் விதத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப உருவம் மாறுபடுகிறது என்று சொன்னேன். என் மனதும் சிரித்துக் கொண்டே, " நீ வழிபடும் கடவுளும் ஒன்றே, உனது மனதாகிய எனது நிலையைப் பொறுத்து சில சமயம் நீ கனபதியையும், சில சமயம் விஷ்னுவையும், சில சமயம் அல்லாவையும், சில சமயம் இயேசுவையும் நம்பி வணங்குகிறாய்". ஆனால் உன்னுடைய வேண்டுதல் சேருமிடம் ஒன்றே என்பதை உணராமல் என்று சொன்னது.

நான் வணங்கும் கடவுளைப் பற்றி சற்று புரிந்து கொண்டவனாய், அடுத்து என் மனதைப் பார்த்து அடுத்த கேள்வி கேட்கத் தொடங்கினேன். அது....

பினாத்தல் தொடரும்...

1 comment: