Tuesday, November 2, 2010

பினாத்தல் - 4

பினாத்தல்- 3 இன் தொடர்ச்சி,

என் மனதிடம் அடுத்ததாய், "நான் வணங்கும் கடவுளைப் பற்றிச் சொன்னாய், நல்லது. எல்லாக் கடவுளும் ஒன்றாயிருக்க நான் ஏன் கடவுளைக் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும்" எனக் கேட்டேன்.

என் மனம் என்னைப் பார்த்து பேசத் தொடங்கியது. நீ எப்பொழுதும் கடவுளைக் கோயிலுக்குச் சென்றுதான் வணங்குகிறாய் எனச் சொன்னது முற்றிலும் தவறு. நீ, வீட்டிலுள்ள கடவுளையும், வீதிக்கு ஊர்வலமாய் வரும் கடவுளையும் ஏன் உனக்கு துன்பம் வரும் பொழுது எல்லாம் நீ நிற்கும் இடம் இன்னதென்று பாராமல் ஒரு நிமிடமேனும் கடவுளை வேண்டியிருக்கிறாய் என்பதே உண்மை.

இருந்தும், நீ கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்டிருக்கிறாய். சொல்கிறேன், கேள்! கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்வது என்பது ஒருமுகப்படுத்தப்பட்ட மனதில் நிகழ வேண்டிய ஒன்று. எல்லோராலும் தன் மனதை வீட்டிற்குள் ஒரு முகப்படுத்த இயலாது. அதற்கு காரணமாக அமைவது அவர்களைச் சுற்றியுள்ள சுற்றமும், அவர்களுக்கான குடும்பத்தின் கடமைகளும். அதனால் கோவிலுக்குச் செல்லும் பொழுது ஒவ்வொருவராலும் தன் மனதின் புறத்தே உள்ள சலனங்களில் இருந்து வெளிவர இயலுகிறது.

புறச்சலனங்கள் நீங்கிவிட்டால் போதுமா, கடவுளை ஒருமுகத்தோடு வணங்கி விட இயலுமா என்றால் அதுவும் அனைவராலும் இயலாது. என்னை(மனதை) அனைவராலும் சீக்கிரம் ஒருமுகப்படுத்துதல் என்பது இயலாத காரியமாக இருப்பதாலேயே உருவ வழிபாடு செய்து என்னை ஒருமுகமாக்க முயல்கிறார்கள். உருவ வழிபாடு எப்படி என்னை ஒருமுகமாக்குகிறது என்றும் சொல்கிறேன், கேள்!

கோவிலின் கருவறையில் இப்பொழுது இருப்பது போல் மின்விளக்குகள் பன்டைய காலங்களில் இல்லை. இப்பொழுதும் பல கோவில்களின் கருவறைக்குள் மின்விளக்கிற்கு அனுமதி இல்லை. அது ஏனென்று யோசித்தாயா. மின்விளக்கின் வெளிச்சத்தில் கடவுளைக் காணும் போது உன் பார்வை பல இடங்களையும் சுற்றி வரும். அதனால் என்னைக் கட்டுபடுத்தி ஒருமுகமாக்குவது என்பது இயலாது. அதனாலேயே பன்டைய காலங்களில் ஒரு சிறு விளக்கின் ஒளியில் கடவுளைக் கண்டு மக்கள் பிரார்த்தித்தனர். விளக்கின் ஒளியானது உனது பார்வையை தன் பக்கமாகவே ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் என்னையும் வேறு எண்ண ஓட்டத்திற்கு தள்ளாமல் தடுக்கிறது.

இதன் காரணமாக கொவிலுக்குச் செல்லும் போது, என்னை ஒருமுகப்படுத்தி வேண்டுதல் என்பது சாத்தியமாகிறது. என்னை எங்கேயும் உன்னால் ஒருமுகப்படுத்தி கடவுளைப் பிரார்த்திக்க முடியுமென்றால் கோவில் வேண்டாம், இடர்வரும் இடம் எதுவாயினும் அங்கிருந்தபடியே கடவுளைப் பிரார்த்திக்க இயலும். கோவிலுக்குச் சென்று வழிபடுவதின் காரணம் இதுதான்.

இன்னுமொன்றும் சொல்கிறேன் கேள். அது...

பினாத்தல் தொடரும்...

No comments:

Post a Comment