Tuesday, November 9, 2010

பினாத்தல் - 5

பினாத்தல் 4 ன் தொடர்ச்சி,

கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குதல் என்பது என்னை ஒருமுகப்படுத்த என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா, அதே போல் நீ வணங்கும் போது வேண்டிக் கொள்ளும் நிகழ்வுகள் உன்னுள் எவ்வித உளவியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்கிறேன் கேள்.

ஒருமுகப்படுத்தப்பட்ட என்னுள் நீ வேண்டிக் கொள்ளும் எந்த விஷயமானாலும் உன்னுள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, நீ பெரும்பாலும் " எனக்கு நல்ல படிப்பு வேண்டும், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும், என்னை நம்பி வருபவர்களை நான் கைவிடக் கூடாது" என்று வேண்டிக் கொள்கிறாய் அல்லவா, இது என்னுள் ஆழமாய் பதிந்து விடுகிறது.

என்னுள் ஆழமாய் பதியப்பட்ட இவ்வேண்டுதல்கள் உன் மனம் அமைதியாய் இருக்கும் போதெல்லாம் இவற்றைச் சொல்லி உன்னை, நீ வேண்டியபடி இருக்கத் தூண்டுகிறது. என்னுள் ஆழமாய் பதியப்படும் உனது வேண்டுதல்களை நோக்கி உன்னை நான் நகர்த்துகிறேன். இவ்வாறு உன்னை, உனது வேண்டுதலின்பால் நகர்த்துவதால் நான், நீ வேண்டிய பொருள் உன்னைச் சேர வழிவகை செய்கிறேன்.

என்னை நீ எப்படித் தயார் செய்து வைக்கிறாயோ அப்படியே நீ ஆகிறாய். என்னுள் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உன்னில் பிரதிபலிக்கும். அதனால் என்னுள் விதைக்கப்படும் வேண்டுதல்களும், ஒருமுகப்படுத்தப்பட்ட வழிபாடும் உன்னை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்வது உன் கையில்தான் உள்ளது.

எனது மனதுடனான இந்த பினாத்தல்களை கேட்டு ஆன்மீகம் பற்றிய எனது நிலைப்பாட்டில் சற்று தெளிவடைந்தவனாக அடுத்து என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் சாதியத்தைப் பற்றிய எனது நிலைப்பாடை ஆராயத் தொடங்கினேன்.

பினாத்தல் தொடரும்...


1 comment: