Friday, December 31, 2010

பினாத்தல் - 7

சாதியக் கொடுமைகள் பற்றி பார்க்கும் முன்னர் படிப்பவர்களின் தெளிவிற்காக, எனது இந்நிலைப்பாடை படிக்கும் பொழுது இவன் என்ன இனத்தவனாய் இருக்கக் கூடும் என்று ஆராய வேண்டாம். கண்டிப்பாய் நான் பார்ப்பணன் அல்லன். இன்ன சாதியினன் என்று குறிப்பிட்டுக் கொள்ள விரும்பாத மனித இனத்தைச் சார்ந்தவன் என்று படிக்க விரும்பினால் மட்டும் மேலும் எனது நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள என்னைத் தொடருங்கள்.

சாதியை எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன் என்று குரல் கொடுக்கும் சிலர் ஆரம்பத்திலேயே பார்ப்பனியன் அதைச் செய்தான், இதைச் செய்தான் எனக் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் பார்ப்பனியர்கள் மொத்தம் எத்தனை சதவீதம். (மூன்றோ, மூன்றே முக்காலோ என்று கேள்வி). எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அளவிலான பார்ப்பனர்கள் தான் சாதிக் கொடுமைக்கு மொத்த ரணமா. என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனர்களின் பங்கும் சாதிக் கொடுமையில் உள்ளது என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பார்ப்பனியர்கள் மட்டுமே சாதிக் கொடுமைகளுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்...

எனது தாத்தா காலத்தில் எங்கள் வீடுகளில் பிரவேசிக்க பிற இனத்தவருக்கு மட்டுமல்ல, பிராமணர்களுக்கும் கூட அனுமதி இருந்ததில்லை. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், சில விசேஷ நிகழ்வுகளான, புதுமனைப் புகுவிழா, திருமணம் மற்றும் இறந்தவர்களுக்கான ஈமக்கிரியைச் செய்ய, மந்திரம் ஓத பிராமணர்கள் வீட்டில் நுழைய அனுமதி இருந்தது. மற்றபடி சொந்த ரத்த பந்தங்களைத் தவிர வேறு எவருக்கும் வீட்டில் அனைத்து பகுதிகளிலும் நுழைய அனுமதி இருந்ததில்லை. எங்கள் இனத்தவரே வருகை புரிந்தாலும் வரவேற்பறை வரையே அனுமதி இருந்தது.

இப்பொழுதும் சொல்லுங்கள் பிராமணர்கள் மட்டுமே சாதிக் கொடுமைக்கு காரணமா. சாதிக் கொடுமைக்கு பார்ப்பனியம் மட்டும் காரணம் என்று இன்னும் சொல்வார்களானால் அதற்கு நான் காரணமாக நினைப்பது கடவுள் இல்லை என்ற கொள்கைக்கு வலு சேர்க்க இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்கிறார்களோ என்பது தான். சரியாகச் சொல்ல வேண்டுமானால் எனக்கு இவர்களால் ஒரு மாபெரும் குழப்பம் தான் மிஞ்சுகிறது. பார்ப்பனியம் பிடிக்காமல் போனதால் கடவுள் இல்லை என்று சொல்லத் தொடங்கினார்களா, அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கைக்கு வலு சேர்க்க பார்ப்பனியம் பிடிக்காமல் போனதா... இது எனக்குச் சம்பந்தமில்லாதது என்று தானே சொல்கிறீர்கள்... சரி வாருங்கள் சாதியைப் பற்றிய எனது நிலைப்பாடிற்கேச் செல்வோம்.

சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு முறையின் இன்றைய நிலை என்ன. இட ஒதுக்கீடு ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் வேண்டுமானால் அது ஒரு நல்ல திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றும் பள்ளி, கல்லூரி, அரசாங்க வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் தானா... தகுதி உடையவர்க்கு இடத்தை அளிக்கலாமே... தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்று சொல்லி இன்றும் அவர்களை மட்டம் தட்டுவதாகவே இந்த இட ஒதுக்கீடு முறை எனக்குப் படுகிறது.

சாதிய வேறுபாடுகள் என்னுள் பள்ளிப்பருவத்தில் ஏற்பட்டது என்று சொன்னேன் அல்லவா, அது எவ்வாறு என்னை விட்டு அகன்றது என நான் சொல்லும் காரனங்களே சாதியை சமூகத்திலிருந்து ஒழிக்கவும் உதவும் என நான் நம்புகிறேன். இனி, சாதியை என்னிலிருந்து அகற்றிய, சமூகத்திலிருந்து அகற்ற உதவும் என நான் நம்பும் வழிமுறைகள்...

பினாத்தல் தொடரும்

No comments:

Post a Comment