Friday, December 31, 2010

பினாத்தல் - 8

எனது தாத்தாவின் காலத்தில் எங்கள் வீட்டில் (எங்கள் வீட்டில் மட்டுமல்ல எங்கள் ஊர் முழுவதும்) கடைபிடிக்கப்பட்ட நிலைப்பாட்டை நான் முன்னமே சொல்லி இருந்தேன். எனது தந்தைக்கு பிற இனத்தவன் வீட்டிற்குள் வந்தால் என்ன என்று எண்ணம் இருந்த போதிலும் அவர் தன்து தந்தையிடம்(அதாவது எனது தாத்தாவிடம்) பேசி வீட்டில் மனஸ்தாபம் உருவாவதை விரும்பாமல் எனது தாத்தா காலமான பிறகு எனது தந்தையின் காலத்தில் அதாவது எனது தந்தை வீட்டின் அதிகாரத்திற்கு வந்த பிறகு எங்கள் வீட்டில் சாதி வேறுபாடு பார்க்காமல் எவரேனும் விருந்தினராக வந்து தங்க தடை இல்லாமல் வாழும் சூழல் உருவாகி இருக்கிறது.

சாதி வேறுபாடு என்பது எதுவும் இல்லை என்று என் தந்தை மூலம் உணர்ந்த நான் என்னுள்ளிருந்த சாதி வேறுபாட்டைக் கலைந்து இன்று கலப்புத் திருமணம் செய்துக் கொள்வதிலும் தவறில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்து உள்ளேன். ஆனால் கலப்புத் திருமணம் பற்றி எனது தந்தையிடம் நான் பேசி வீட்டில் மனஸ்தாபம் வர விரும்பாத நான் இதனை, வீட்டின் அதிகாரம் என் கைக்கு வரும் பொழுதே அதாவது எனது மகனுக்கு கலப்புத் திருமணத்தைச் செயல்படுத்துவதையே வீட்டின் சூழலுக்கு உகந்ததாகக் கருதுகிறேன். இது காலம் தாழ்த்தி ஊரை ஏய்க்க நான் செய்யும் சதி எனச் சிலர் சொல்லலாம். அவர்களுக்கு நான் அப்படியே இருந்து விட்டு போவதில் எனக்கு வருத்தம் இல்லை.

குடும்பத்தில் பல காலமாக வேரூரி வளர்ந்த ஆலமரம் போன்ற சாதியை வெட்டப் போய் குடும்பம் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்கான முன்னேற்பாடுதான் இது. இதனால் நான் சொல்ல வருவது சாதியை ஒழிக்கிறேன் என்று மேடையேறி பிரசங்கம் செய்பவர்கள் முதலில் தாங்களும், தங்கள் குடும்பத்தையும் சாதியை முழுவதும் எதிர்க்கக் கூடியதாய் மாற்றுங்கள். சமூகம் தானாய் சாதி இல்லாததாக மாறி விடும். இதற்கான சூழலும் இப்பொழுது கிராமங்கள் நகரமயமாகிக் கொண்டிருப்பதால் ஏதுவாகவே இருக்கிறது. என்னுடன் பேசும் எல்லோருக்கும் இந்த ஒரு விஷயத்தில் வெறுப்பு வரக் கூடும். அது நான் எப்பொழுதும் மாற்றம் என்பது தன்னிடத்தில் இருந்தும் தன்னுடைய குடும்பத்தில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என நான் சொல்வது. இது முட்டாள்தனமாகவும் படலாம். ஆனால் இதுவே நிதானமான மற்றும் நிரந்தரமான மாற்றத்தைச் சமூகத்தில் கொண்டு வர வழிவகைச் செய்யும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

சமூகத்தில் சாதி ஒழிப்பு வீட்டில் இருந்து மாறினால் மட்டும் மாறுமா என்றால் மாறாது. இன்னும் ஒரு விஷய்மும் மாற வேண்டும். அது சாதியை எனக்கு பள்ளிப் பருவத்தில் அறிமுகம் செய்து வைத்த அரசாங்கம் முத்திரை குத்தும் சாதிச் சான்றிதழும், இட ஒதுக்கீடு முறையும். இவையிரண்டும் இல்லாத்தாக வேண்டும் என நான் எதற்காகச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா. ஒரு சிறு உதாரணம் மட்டும் சொல்கிறேன். அரசாங்க வேலைக்காகவும் இன்னும் சில சலுகைகளுக்காகவும் இன்று தனது சாதியை தாழ்த்தப்பட்ட சாதி என மாற்றிச் சாதிச் சான்றிதழ் வாங்கும் வேடிக்கைகளை நான் கண்கூடாகக் காண்கிறேன். இந்நிலை மேலும் தொடராமலும், சாதியின் அடிப்படையில் இடம் என்றில்லாமல் தகுதி உடையவனுக்கே இடம் என்று வந்தால் சமூகத்தில் இருந்து சாதி அழிவதோடு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தான் போட்டியிடும் இடத்திற்காய் தனது தரத்தை உயர்த்திக் கொள்ள முனைவார்கள். இதை சாதியை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் ஆதரிப்பார்களா... நிச்சயம் மாட்டார்கள்... ஏனெனின்ல் இன்று சாதிக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அதை வைத்து ஆதாயம் தேடவே அதிகம் முற்படுகிறார்கள் ஒருசிலரைத் தவிர...

சாதியைப் பற்றிய எனது நிலைப்பாடு இத்துடன் நிறைவடைகிறது. அடுத்து...

பினாத்தல் தொடரும்...

No comments:

Post a Comment